கல்பாக்கம் அருகே ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு

கல்பாக்கம் அருகே ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

கல்பாக்கம் அருகே ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற 2 பேர் உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் மதுரையை சேர்ந்த கண்ணன் (55) , கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் கிராமத்தை சேர்ந்தவ துரை (47), ஆகிய இருவரும் சமையல் பணி செய்து வந்துள்ளனர். சமையல் பணி இல்லாத நாட்களில் கிடைத்த வேலையை செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக சைக்கிளில் வாயலூர் பகுதியில் உள்ள இசிஆர் சாலையை கடக்க முயன்ற போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரி சைக்கிளில் வந்த இருவர் மீது வேகமாக மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் என்பவர் உயிரிழந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த துரையை அங்கிருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே துரை உயிரிழந்தார். மேலும் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய ரசாயன டேங்கர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்ததில், டேங்கர் உடைந்து ரசாயனம் கடுமையான புகையுடன் சாலையில் வெளியேறியது. இந்த ரசாயன புகையால் அப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in