

சென்னை: சென்னை கொடுங்கையூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் இறந்த வழக்கில் மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சியை சேர்ந்தவர் நித்யா (26). இவரும், கொடுங்கையூர் வெங்கடேஷ்வரா காலனி 6-வது தெருவைச் சேர்ந்த பாலமுருகனும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இரு வரும் திருமணம் செய்துகொள்ளா மல் கொடுங்கையூர் ஆசிரியர் காலனி 5-வது தெருவில் வாடகை வீட்டில் இரண்டு மாதங்களாக தம்பதியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 5-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த நித்யா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல்அறிந்த கொடுங்கையூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று. நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் நித்யா, பல ஆண்களுடன் தொடர்பில் இருந்திருப்பதும், சில மாதங்களுக்கு முன்பு வரை சைதாப்பேட்டை சடையப்பன் சந்து பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சந்தோஷ் குமார் (27) என்பவரை காதலித்திருப்பதும், பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருப்பதும், சம்பவம் நடந்த அன்று சந்தோஷ்குமார் அங்கு வந்து சென்றிருப்பதும் தெரியவந்தது.
தொடர் விசாரணை: இதையடுத்து போலீஸார் சந்தோஷ்குமாரிடம் விசாரணை நடத்தியதில், நித்யா கொலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மறுத்துள்ளார். அவர் வீட்டுக்கு வந்து சென்றது குறித்த கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட ஆதாரங்களை காட்டி போலீஸார் விசாரணை நடத்தியதில், நித்யாவை கொலை செய்ததை சந்தோஷ்குமார் ஒப்புக் கொண் டார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்த தகவல்கள் வருமாறு:
மருத்துவர் சந்தோஷின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி. சைதாப்பேட்டையில் தங்கியுள்ள அவர், ஆலந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்து வருகிறார். சமூக ஊடகம் மூலமாக கடந்தாண்டு அவருக்கு நித்யா அறிமுகமாகியுள்ளார்.
ரூ.8.50 லட்சம் பறிமுதல்: அப்போது நித்யா, தான் மென்பொறியாளர். அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன் என்று சொன்னதை, சந்தோஷ்குமார் நம்பி யுள்ளார். காதலிக்க தொடங்கிய இருவரும், திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் தம்பதிகளாக வாழ்ந்தனர். இதற்கிடையே நித்யாவுக்கு வேறு ஒரு இளைஞருடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், சந்தோஷ்குமார் பிரிந்து சென்றுள்ளார்.
ஆனால் நித்யா, இருவரும் தனிமையில் இருந்த புகைப்படங்கள், ஆபாச புகைப்படங்கள், விடியோக்களை சந்தோஷ்குமாரிடம் காட்டி, சமூக ஊடகங் களில் அதை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி சந்தோஷ் குமாரிடம் இருந்து ரூ.8.50 லட்சம் பறித்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று நித்யா, சந்தோஷ் குமாரை தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். அன்று சந்தோஷ்குமார் சென்றதும், இருவரும் மது அருந்தியுள்ளனர். இதில் நித்யா, கடுமையான மதுபோதையில் இருந்த போது தனக்கு லேசாக தலைவலிப்பதாக தெரிவித்துள்ளார்.
உடனே சந்தோஷ்குமார், நித்யாவின் தலைக்கு மசாஜ் செய்வதுபோல நடித்து, அவரை படுக்கையில் தள்ளி தலையணையை முகத்தில் வைத்து அழுத்தி மூச்சு திணறச் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் அந்த வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தை நித்யாவின் கைவிரல் ரேகை மூலம் திறந்து, அதில் இருந்த 25 பவுன் தங்க நகையை எடுத்து கொண்டு தப்பியோடியுள்ளார்.
நகையை, தனது வீட்டின் எதிரே வசிக்கும் நண்பரிடம் கொடுத்துள்ளார். அந்த நகையையும் போலீஸார் தற்போது மீட்டுள்ளனர். இதையடுத்து, சந்தோஷ் குமாரை கைது செய்த போலீஸார், இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.