

கோவை: கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் கோவை விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஒரு விமானம் சிங்கப்பூர் வந்து பின்னர், அங்கிருந்து புறப்பட்டு நேற்று (ஜூன் 6) இரவு 11.30 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்து இறங்கிய பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். மேலும், அவர் கொண்டு வந்த உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், 3 கிலோ 155 கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அப்பெண் பயணி கேரளாவைச் சேர்ந்தவர் என்றும், பாங்காங்கில் இருந்து, சிங்கப்பூர் வந்து அங்கிருந்து கோவை வந்தார் என்பதும் தெரியவந்தது. மேலும், இங்கிருந்து கேரளாவுக்குச் செல்ல அவர் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. பிடிபட்ட உயர் ரக கஞ்சாவின் மதிப்பு பல லட்சக்கணக்கில் இருக்கும் எனத் தெரிகிறது. தொடர்ந்து இவ்வழக்கில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது, யார் கொடுத்து அனுப்பியது, யாரிடம் கொடுக்கச் சொன்னார்கள் என்பது குறித்து அப்பெண் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.