

சென்னை: காதலனுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்த ஐடி பெண் ஊழியர், அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் நித்யா(26). இவரது தந்தை பாஸ்கர்(58). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். நித்யா பி.காம் முடித்துவிட்டு, அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 8 மாதங்களாக கொடுங்கையூரில் தனியாக வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார். அப்போது, கொடுங்கையூர் விவேகானந்தா காலனியைச் சேர்ந்த பாலமுருகன்(28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த 2 மாதங்களாக கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியில் ஒரு வாடகை வீட்டில் நித்யாவும், பாலமுருகனும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் - மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், ‘எனது பெற்றோர் வீட்டுக்கு வருகிறார்கள்.
அதனால், நீ வெளியே சென்றுவிட்டு பிறகு வா’ என பாலமுருகனிடம் நித்யா கூறியுள்ளார். அதன்படி, மாலை 5 மணி அளவில் பாலமுருகன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, நித்யா வாயில் நுரை தள்ளியபடி படுக்கையறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்து வந்த கொடுங்கையூர் போலீஸார் நித்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டில் இருந்த 25 பவுன் நகையும் காணாமல் போனதாக போலீஸிடம் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நித்யா அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் எனவும், பிரேத பரிசோதனை முடிவடைந்த பிறகே முழு விவரங்கள் தெரியவரும் எனவும் கூறினர். மேலும், நித்யாவின் காதலன் பாலமுருகன் மற்றும் அவரது பெற்றோரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.