Published : 07 Jun 2025 06:59 AM
Last Updated : 07 Jun 2025 06:59 AM
சென்னை: நுங்கம்பாக்கம் மதுபான பாரில் நடந்த அடிதடி மோதல் விவகாரத்தில் முக்கிய திருப்பமாக உதவி ஆய்வாளர், காவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான பாரில் கடந்த மாதம் 22-ம் தேதி ஈசிஆரில் உணவகம் நடத்தி வரும் தூண்டில் ராஜாவுக்கும், ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் மகன் செல்வபாரதிக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பார் சூறையாடப்பட்டது. இதுகுறித்து பார் மேலாளர் அளித்த புகாரின்பேரில் நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தூண்டில் ராஜாவுக்கு ஆதரவாக அதிமுக பிரமுகரும், நடிகருமான அஜய் வாண்டையார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி, அதிமுக நிர்வாகி பிரசாத், நாகேந்திர சேதுபதி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக இருந்த தூண்டில் ராஜாவை புனேவில் ஜூன் 4-ம் தேதி தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முதலில் சாதாரண அடிதடி வழக்கு என நினைத்த போலீஸார், விசாரணைக்கு பிறகு, இவர்கள் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
குறிப்பாக அதிமுக நிர்வாகி பிரசாத் மீது சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு நிலுவையில் இருந்தது. அந்த வழக்கில் பிரசாத்தை கைது செய்தனர். மேலும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார், கோவையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மணி துரை ஆகியோர் செயல்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதில் காவலர் செந்தில்குமார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு பாதுகாவலராக பணியாற்றியவர். இதையடுத்து தனிப்படையினர் காவலர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் மணி துரை ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் உதவி ஆய்வாளரும், காவலரும் கைது செய்யப்பட்ட சம்பவம் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT