ஈமு கோழி மோசடி வழக்கில் நிர்வாக இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.7.89 கோடி அபராதம்

ஈமு கோழி மோசடி வழக்கில் நிர்வாக இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.7.89 கோடி அபராதம்
Updated on
1 min read

கோவை: ஈமு கோழி வளர்ப்பு மோசடி வழக்கில், சுசி ஈமு நிறுவன நிர்வாக இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் சுசி ஈமு பார்ம் என்ற ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம், பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்றும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டு தொகை திருப்பித் தரப்படும் எனவும் விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால் பணத்தை திருப்பித் வழங்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் 2012-ல் சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில் 385 பேரிடம் ரூ.7.61 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சுசி ஈமு பார்ம்ஸ் நிர்வாக இயக்குநர் குருசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கோவை முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், குற்றம் சாட்டப்பட்ட குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட 385 முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரித்து வழங்குமாறும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் முத்துவிஜயன் ஆஜரானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in