

சென்னை: சென்னையில் மூன்று இடங்களில் 3,652 உடல்வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸார் 7 பேரை கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் அதிக அளவில் உடல்வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்த சங்கர நாராயணன் (28), திருநீர்மலையை சேர்ந்த சண்முகம் (46) என்பதும், விற்பனைக்காக மாத்திரைகளை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 3,070 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், கோயம்பேடு மேட்டுக்குப்பம் வாட்டர் கம்பெனி பின்புறம் ரோந்துப் பணியில் இருந்த போலீஸார், அங்கு உடல் வலி நிவாரண மாத்திரைகளை விற்றுக் கொண்டிருந்த மேட்டுக்குப்பத்தை சேர்ந்த பிரகாஷ்(24), ஆவடியை சேர்ந்த மாதேஷ்(21) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த அதேபகுதியை சேர்ந்த திருமாறன் (24), சக்திவேல் (20), பரத் (20) ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 182 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் அனைவரும் மும்பையில் இருந்து ரயில் மூலம் மாத்திரைகளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 7 பேரிடம் இருந்து மொத்தம் 3,652 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.