

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் ரூ.35 லட்சம் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த பெண் உள்பட 6 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ரயில்வே யார்டு அருகே சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போதை பொருள் தடுப்பு போலீஸார் மற்றும் ஆர்.கே.நகர் போலீஸார் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பில் நேற்று முன் தினம் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 6 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அவர்களது உடமைகளை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அதில் மெத்தம்பெட்டமைன் போதை பொருள், ஒரு துப்பாக்கி, 15 தோட்டக்கள் இருந்ததை போலீஸார் கண்டனர். அதனை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருவொற்றியூரை சேர்ந்த முகமது அலி(25), சேப்பாக்கத்தை சேர்ந்த முகமது அசார்(26), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரியாஸ் கான்(26), தண்டையார்பேட்டையை சேர்ந்த அப்பாஸ் அலி(30), செங்குன்றத்தை சேர்ந்த மீனா(46), சேலையூரை சேர்ந்த பர்வேஸ் உசேன்(26) என்பது தெரியவந்தது. மேலும், விசாரணை குறித்து போலீஸார் கூறுகையில், ‘மீனா மணிப்பூர் மாநிலம் மோரே பகுதியை சேர்ந்தவர்.
இவர் தனது மகன் அஸ்லாம் என்பவரின் உதவியுடன் மோரேவிலிருந்து ரயில் மூலம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கடந்தி வந்து, தனது தம்பி மகன் அப்பாஸ் அலியிடம் கொடுத்துள்ளார். அப்பாஸ் அலி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாம்பரம், ராயபுரம், செங்குன்றம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் 1 கிராம் மெத்தம்பெட்டமைனை ரூ.5,000 வீதம் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்தவகையில், இவர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ரயில்வே யார்டு அருகே மெத்தம்பெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டிருந்த போது போலீஸிடம் சிக்கினர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மெத்தம்பெட்டமைனின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி யாருடையது என்பது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,’ என்றனர்.