Published : 04 Jun 2025 11:51 PM
Last Updated : 04 Jun 2025 11:51 PM

திருப்பூரில் 18 ஆண்டுக்கு முன்பு தொழிலதிபரை சுட்டு கொலை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர்: 18 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை முயற்சியின் போது தொழிலதிபதிரை சுட்டுக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் தென்னம்பாளையம் பூசாரியம்மன் தோட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (30). தொழிலதிபர். இவருடைய தந்தை கருப்பசாமி (60). தாயார் சிவகாமி (50). கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது, இரவு 9 மணி அளவில் அழைப்பு மணி அடித்தது. சிவக்குமார் கதவை திறந்தார். அப்போது 3 பேர் உள்ளே நுழைந்து கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டி, சிவக்குமாரை வீட்டுக்குள் அழைத்துச்சென்று நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இதை பார்த்த கருப்பசாமி அவர்களை தடுக்க முயன்றார். துப்பாக்கியால் சுட்டத்தில் கருப்பசாமியின் நெஞ்சில் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்தார்.

தடுக்க சென்ற சிவக்குமார், சிவகாமி ஆகியோருக்கும் கையில் காயம் ஏற்பட்டது. அவர்கள் சத்தம் போட கொள்ளையர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பினார்கள். இதில் கருப்பசாமி பரிதாபமாக இறந்தார். தாய், மகன் சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் மிலிட்டரி காலனியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சலீம் (எ) சையத் சலீம்(45) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் சலீம், ராணுவத்தில் பணியாற்றியபோது தனது நண்பர்களாக இருந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அஷ்வின்குமார், மேற்கு வங்கத்தை சேர்ந்த நாராயணதாஸ் ஆகியோருடன் சேர்ந்து, தொழிலதிபர் சிவக்குமார் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்தபோது கொள்ளை முயற்சி தோல்வியடைந்த நிலையில், துப்பாக்கியால் சுட்டு தப்பியது தெரியவந்தது. அஷ்வின்குமார், நாராணயதாஸ் ஆகியோர் தலைமறைவானார்கள்.

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. கொலை குற்றத்துக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதமும், ஆயுதம் பயன்படுத்தி குற்றத்துக்கு 3 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், 2 பேரை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், கொலை செய்ய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் ஆகியவற்றை ஏக காலத்தில் சலீம் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி பத்மா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் கூடுதல் மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஏ.வி.விவேகானந்தன் ஆஜரானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x