சிவசங்கரன், மணிகண்டன்
சிவசங்கரன், மணிகண்டன்

சிவகங்கை அருகே ஆடு, கோழி திருடியதாக சகோதரர்கள் 2 பேரை அடித்துக் கொன்ற கிராம மக்கள்: 6 பேர் கைது

Published on

சிவகங்கை: ஆடு, கோழி திருடியதாக சகோதரர்கள் 2 பேரை கிராம மக்கள் சிலர் அடித்துக் கொன்றனர். இது தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகேயுள்ள அழகமாநகரி பகுதி தோட்டத்தில் நேற்று அதிகாலை 2 பேர் ஆடு, கோழிகளைத் திருடிக் கொண்டிருந்தனர். அப்போது காணாமல்போன மாட்டைத் தேடி வந்த இருவரைப்பார்த்தவுடன், ஆடு, கோழி திருடிக் கொண்டிருந்த இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். தகவலறிந்து திரண்ட கிராம மக்கள் சிலர் இருவரையும் விரட்டிப் பிடித்து, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர்.

விசாரணையில், இருவரும் சிவகங்கை அருகே கட்டாணிபட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் மணிகண்டன் (31), சிவசங்கரன் என்ற விக்னேஸ்வரன் (24) என்பதும், எஸ்.எஸ்.கோட்டை அருகேயுள்ள வி.கல்லம்பட்டியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. தகவலறிந்து வந்த மதகுபட்டி போலீஸார் பலத்த காயமடைந்த 2 பேரையும் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத், டிஎஸ்பி அமலஅட்வின் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர், அழகமாநகரியைச் சேர்ந்த திருப்பதி (45) சோமராஜ் (31), பிரபு (30), தீபக் (19), விக்னேஸ்வரன் (31), தினேஷ் (31) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 10 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "உயிரிழந்த மணிகண்டன் மீது மதுரை மாவட்டத்தில் திருட்டு வழக்கு உள்ளது. அதேபோல, சிவசங்கரன் மீது திண்டுகல்லில் ஒரு வழக்கு உள்ளது" என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in