ஓடும் ரயிலில் தொங்கியவாறு ரீல்ஸ்-க்காக வீடியோ எடுத்த பெண் கைது: மன்னிப்பு கோரியதால் ஜாமீனில் விடுவிப்பு

ரயில் படிக்கட்டில் தொங்கியபடி  சகிலாபானு எடுத்த ரீல்ஸ். (உள்படம்) வீடியோவில் மன்னிப்பு கேட்ட சகிலாபானு.
ரயில் படிக்கட்டில் தொங்கியபடி சகிலாபானு எடுத்த ரீல்ஸ். (உள்படம்) வீடியோவில் மன்னிப்பு கேட்ட சகிலாபானு.
Updated on
1 min read

நாகர்கோவில்: ரயிலில் படிக்கட்டில் தொங்கியவாறு நடனமாடி ரீல்ஸ்-க்காக வீடியோ எடுத்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் படிக்கட்டில் தொங்கியவாறு ஒரு பெண் நடனமாடி ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.

இந்தக் காட்சி வைரலான நிலையில், ரயில் பயணத்தின்போது ஆபத்தை உணராமல் அந்த பெண் செய்த செயலைக் கண்டித்து பலரும் கருத்து பதிவிட்டனர். இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் விசாரணை நடத்தினர்.

மன்னிப்பு கேட்டு வீடியோ: விசாரணையில், அந்தப் பெண் நாகர்கோவில் அருகே மேலராமன்புதூரை சேர்ந்த சகிலாபானு (30) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். போலீஸார் தன்னை தேடுவதை அறிந்த சகிலாபானு, தான் ரயில் பயணத்தின்போது ஆபத்தான முறையில் ‘ரீல்ஸ்’ எடுத்ததற்காக மன்னிப்பு கேட்டு, மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் கைகூப்பி வணங்கிவாறு, ‘‘3 நாட்களுக்கு முன்பு ரயில் படிக்கட்டில் தொங்கியவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தேன். நான் யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் செய்த அந்த செயல் இவ்வளவு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று கருதவில்லை. இதனால், வெளியே தலைகாட்ட முடியவில்லை.

நான் செய்தது தவறுதான். அந்த வீடியோவை நீக்கிவிட்டேன். தவறை உணர்ந்துவிட்டேன். இதுபோன்று யாரும் ரீல்ஸ் எடுக்காதீர்கள். தவறி விழுந்திருந்தால் உயிர், அல்லது கை, கால் போயிருக்கலாம். எனவே, இதுபோன்ற ஆபத்தான ரீல்ஸ் எடுக்காதீர்கள்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், சகிலா பானுவை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கைது செய்து, பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in