Published : 04 Jun 2025 05:34 AM
Last Updated : 04 Jun 2025 05:34 AM

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல நாடகமாடி பொதுமக்களிடம் ரூ.45 கோடி நூதன மோசடி: 6 பேர் கைது

சேலம்: ரிசர்வ் வங்கியின் பெயர், சின்னங்களைப் போலியாக பயன்படுத்தியும், வங்கி அதிகாரிகள் போல் நாடகமாடியும் இரிடியம், காப்பர் விற்பனையில் முதலீடு செய்தால் அதிகமான வட்டி கிடைக்கும் என ஏமாற்றியும் ரூ.45 கோடி வரை மோசடி செய்த வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்​திய ரிசர்வ் வங்​கி​யின் பெயர் மற்​றும் சின்​னங்​களைப் பயன்​படுத்தி போலி ஆவணங்​களைத் தயார் செய்து பொது​மக்​களிடம் பண மோசடி​யில் சிலர் ஈடு​பட்டு வரு​வ​தாக ரிசர்வ் வங்கி இணை​யதளத்​தில் பொது​மக்​கள் புகார் அளித்​தனர். இதுகுறித்து ரிசர்வ் வங்​கி​யின் உதவி பொது​மேலா​ளர் கென்​னடி, சென்னை வேப்பேரி காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் புகார் அளித்​தார்.

அதன் ​பேரில் சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர். பின்​னர், இந்த வழக்கு கடந்த மார்ச் 15-ம் தேதி சேலம் மாநகர ஒருங்கிணைந்த குற்​றப்​பிரிவுக்கு மாற்​றப்​பட்டு விசா​ரணை நடந்தது. விசா​ரணை​யில், தஞ்​சாவூரைச் சேர்ந்த நித்யானந்​தம், சந்​தி​ரா, தருமபுரியைச் சேர்ந்த அன்​புமணி, சேலத்​தைச் சேர்ந்த முத்​து​சாமி, கேசவன், கிஷோர்​கு​மார் ஆகியோர் ரிசர்வ் வங்கி அதிகாரி​கள் போல் நாடகமாடி, போலி ஆவணங்​கள், முத்திரைகளைப் பயன்படுத்தி மோசடி​யில் ஈடு​பட்​டது தெரிய​வந்​தது.

மத்​திய அரசுக்கு இரிடி​யம், காப்​பர் விற்​பனை செய்​யப்​பட்ட வகை​யில் பெறப்​பட்ட பல்​லா​யிரம் கோடி ரூபாய் பணத்தை விடுவிக்க ரிசர்வ் வங்​கிக்கு சேவை கட்​ட​ணம் மற்​றும் வங்கி உயர் அதி​காரிகளுக்கு கமிஷன் கொடுக்க வேண்​டும் என்​றும், அவ்​வாறு பணம் செலுத்​துவோருக்கு அதிக வட்​டி​யுடன் கோடிக்கணக்​கான ரூபாய் முதலீட்டு தொகை திரும்ப கிடைக்​கும் என்றும் பொது​மக்​களிடம் கூறி​யுள்​ளனர்.

இதனை நம்பி சென்​னை, கோவை, சேலம், நாமக்​கல், தரு​மபுரி உள்​ளிட்ட மாவட்​டங்​களைச் சேர்ந்த பொது​மக்​களிட​மிருந்து ரூ.45 கோடிவரை மோசடி​யில் ஈடுபட்​டது தெரிய​வந்​தது. இதையடுத்து, கடந்த மே 28-ம் தேதி நித்​​யானந்​தம், சந்​திராவைக் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

மேலும், தலைமறைவாக இருந்த அன்​புமணி, முத்​து​சாமி, கேசவன், கிஷோர் குமார் ஆகியோரை கடந்த மாதம் 30-ம் தேதி கைது செய்து சிறை​யில் அடைத்​துள்​ளனர். இக்கும்பல் தமிழகத்​தில் பல்​வேறு பகு​தி​யிலும், ஆந்​தி​ரா​விலும் ​மக்​களை ஏமாற்றி பணம் பறித்துள்​ளது போலீஸ்​ விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதுதொடர்​பாக போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர். இந்த கும்​பலால் ஏமாற்​றப்​பட்​டு, பணத்தை இழந்த பொது​மக்​கள் சேலம் மாநகர காவல் துறை​யில் புகார் அளிக்​கலாம் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x