

பொள்ளாச்சி: திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்தி கொலை செய்த காதலன், பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அஸ்விதா (19) மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அஸ்விதா வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் கண்ணன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அஸ்விதா உடலில் கத்திகுத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அஸ்விதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித் துள்ளனர்.
இதுகுறித்து கண்ணன் போலீஸில் தகவல் தெரிவித்தார். வீட்டில் தனியாக இருந்த மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பித்து சென்ற மர்ம நபர் குறித்து தாலுகாகாவல் நிலைய போலீஸார் விசாரித்து வந்தனர். கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் உடுமலை சாலையில் உள்ள அண்ணாமலையார் நகரைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிரவீன்குமார் (23) என்பவர் அஸ்விதாவை கொலை செய்ததாகக் கூறி மேற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து தாலுகா காவல் நிலைய போலீஸார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
திருமணம் செய்ய வற்புறுத்தல்: பிரவின்குமாரிடம் நடத்திய விசாரணையில் அஸ்விதா, பிரவீன்குமார் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்தனர். திருமணம் செய்ய பிரவீன்குமார் வலியுறுத்தியபோது அதற்கு அஸ்விதா மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் அஸ்விதா தனது முகநூலில் சிலபுகைப்படங்களை பதிவிட்டுள் ளார். இதை பார்த்த பிரவீன்குமார் நேற்று மதியம் அஸ்விதா வீட்டுக்குச் சென்று அவரிடம் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என மீண்டும் வற்புறுத்தி உள்ளார். அதற்கு அஸ்விதா மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், வீட்டில் இருந்த கத்தியால், அஸ்விதாவின் உடலில் பல இடங்களில் குத்தி விட்டுதப்பித்துச் சென்றுள்ளார். இந்நிலையில் போலீஸார் விசாரணை நடத்தி வருவதை அறிந்து பொள்ளாச்சி தாலுகா காவல்நிலையத்தில் சரணடைந்தார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.