

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெம்பக்கோட்டை அருகே உள்ள வெற்றிலையூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). அதிமுக கிளைச் செயலாளர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவர் அதே கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கிருஷ்ணமூர்த்தி வீட்டின் மேல் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். பெட்ரோல் குண்டு வெடித்து பயங்கர சத்தம் கேட்டுள்ளது.
வீட்டுக்குள் இருந்த கிருஷ்ணமூர்த்தியும் அவரது குடும்பத்தினரும் பதற்றத்துடன் வெளியே வந்து பார்த்தபோது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும், வீட்டின் முன் தீப்பற்றி எரிந்ததும் தெரியவந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர். இதேபோன்று, சற்று தூரத்தில் உள்ள கிருஷ்ண மூர்த்தியின் உறவினரான சவுந்தர் என்பவர் வீட்டிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தடயங்களை சேகரித்தனர். முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா என்றும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.