

விருதுநகர்: காரியாபட்டி அருகே 13 வயது சிறுவனை கொலை செய்ததாக அவரது பெரியப்பாவை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அச்சம்பட்டி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி முத்து. இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களது மகன் கார்த்திக் (13). கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், கார்த்திக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் பெற்றோர் வீடு திரும்பியபோது, கார்த்திக் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
காரியாபட்டி போலீஸார் நடத்திய விசாரணையில், கார்த்திக் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் கார்த்திக்கின் பெரியப்பா ராமரை (52) பிடித்து போலீஸார் விசாரித்தனர். இக்கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த கார்த்திக் செல்போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, ராமர் தனக்கு பழக்கமான பெண்ணிடம் பேசுவதற்காக போனை கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கார்த்திக்கின் கழுத்தை நெரித்து ராமர் கொலை செய்துள்ளார் என்று கூறினர்.