

கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் அமைந்துள்ள ஆசிரமம் ஒன்றில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக ‘டேக்வாண்டோ’ வீராங்கனை குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது தொடர்பான புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட வீராங்கனை கான்பூரின் கோவிந்த் நகரை சேர்ந்தவர். தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டிகளில் விளையாடி உள்ளதாக தகவல். கான்பூர் நகரில் பழைய துணிகளை விற்பனை செய்யும் நோக்கில் கடை ஒன்றை அமைக்க அவர் திட்டமிட்டுள்ளார். அது தொடர்பாக உள்ளூரைச் சேர்ந்த கோவிந்த் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.
அதையடுத்து, கான்பூரில் உள்ள ஆசிரமம் ஒன்றுக்கு அந்தப் பெண்ணை கோவிந்த் அழைத்துச் சென்றுள்ளார். தகுந்த இடத்தில் கடை அமைக்க ஆசிரம நிர்வாகிகள் உதவி செய்வார்கள் என சொல்லி அவர் அழைத்துச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
அந்த ஆசிரமத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு லட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த லட்டில் மயக்க மருந்து சேர்க்கப்பட்டு இருந்ததாகவும், அதை சாப்பிட்டதும் தான் மயக்கம் அடைந்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தன்னை நான்கு பேர் பாலியல் வான்கொடுமை செய்ததாக அவர் தெரிவித்தார். கோவிந்த், ஆசிரமத்தின் தலைமை சாமியார், அங்கிருந்த பூசாரிகள் மீது அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இது தொடர்பான புகாரை வீடியோ ஆதாரத்துடன் காவல் துறையினர் வசம் தற்போது புகார் அளித்துள்ளார். தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு இருந்த அரசியல் ரீதியான செல்வாக்கை எண்ணி புகார் அளிக்க அவகாசம் எடுத்துக் கொண்டதாகவும், இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் நடந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.
தங்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் மறுத்துள்ளனர். சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் ஜனவரி மாதத்தில் தாங்கள் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்றதாக போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளனர்.
ஆசிரமத்தில் உள்ள அறை ஒன்றில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட டேக்வாண்டோ வீராங்கனை தனது புகாரில் கூறியுள்ளார். இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூடுதல் துணை காவல் ஆணையர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.