காதலை கைவிட வலியுறுத்தி சினிமா உதவி இயக்குநரை காரில் கடத்தி தாக்குதல்: 5 பேர் கைது
காதலை கைவிட வலியுறுத்தி சினிமா உதவி இயக்குநரை காரில் கடத்தி தாக்கியதாக வழக்கறிஞர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை உள்பட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் பிரபல திரைப்பட இயக்குநர் சுசீந்திரன். இவரது அலுவலகம் அரும்பாக்கத்தில் உள்ளது. இவரிடம் மதுரையைச் சேர்ந்த ராஜகுமரன் என்பவர் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 29ம் தேதி மதியம் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்ற ராஜகுமரன், மீண்டும் திரும்பவில்லை. இது தொடர்பாக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் சுசீந்திரன் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 30) அதிகாலை காவல் நிலையம் வந்த ராஜகுமரன், “நான் டீ குடிப்பதற்காக அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, கார் ஒன்றில் வந்த 5 பேர் கும்பல் எனது இருசக்கர வாகனத்தின் மீது காரை மோதி, என்னை கீழே தள்ளினர். பின்னர், என்னை காருக்குள் வலுக்கட்டாயமாக ஏற்றி, ஓடும் காரில் வைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர், கொலை மிரட்டல் விடுத்து, இருட்டான பகுதியில் காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு தப்பினர்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் ராஜகுமரனை காரில் கடத்தி தாக்கியது மேற்கு மாம்பலம் சந்திரசேகர் (33), மேற்கு சைதாப்பேட்டை கார்த்திகேயன் (25), தி.நகர் லலித் ஆதித்யா (21), கே.கே.நகர் திவாகர் (21), சைதாப்பேட்டை அகஸ்டின் (21) என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த 5 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ராஜகுமரன் மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்த போது, இளம் பெண் ஒருவரைக் காதலித்துள்ளார். அந்த பெண்ணும் அவரை காதலித்தாராம். இந்நிலையில், அந்த பெண் படிப்பு முடிந்து பெசன்ட் நகரில் உள்ள நிறுவனத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அந்தப் பெண்ணை காதலிப்பதாகவும், தன் காதலை ஏற்கும்படியும் கூறியுள்ளார். ஆனால், அந்த பெண், ராஜகுமரனைக் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், தன்னைக் காதலிக்கும்படி அந்தப் பெண்ணுக்கு நிறுவன உரிமையாளர் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதனால் அந்தப் பெண் கடந்த மார்ச் மாதம் வேலையில் இருந்து நின்று விட்டார். ராஜகுமரனை ஒழித்தால் தான் தனது ஆசை நிறைவேறும் என நினைத்த அந்த தனியார் நிறுவன உரிமையாளர், சைதாப் பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை அணுகி விவரங்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் மற்றொரு வழக்கறிஞரான தற்போது கைது செய்யப்பட்ட சந்திர சேகரைத் தொடர்பு கொண்டு, அவர் கூட்டாளிகள் 4 பேருடன் சென்று, ராஜ குமரனை காரில் கடத்தியதோடு, அவரது காதலை கைவிடும்படி கொலை மிரட்டல் விடுத்து தாக்கி உள்ளனர். இவ்வழக்கில் 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். தொடர்புடைய மற்றவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
