

காரைக்குடி: சிவகங்கையில் சொகுசு காரில் வலம் வந்து 2 ஆண்டுகளாக 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடியவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 46 பவுன் நகைகள், ரூ.14.70 லட்சம், 3 கார்களை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி - குன்றக்குடி பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பு பூட்டிய வீடுகளில் தொடர்ந்து நகை, பணம் திருடுபோனது. குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் மேற்பார்வையில் குன்றக்குடி சார்பு - ஆய்வாளர் பழனி குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்டது. விருதுநகர் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை தனிப்படையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 46 பவுன் நகைகள், ரூ.14.70 லட்சம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், 3 கார்கள், கடப்பாரை, உளி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறும்போது, “பொன்ராஜ் சொகுசு காரில் இரவு நேரத்தில் ஊர், ஊராக வலம் வருவார். அப்போது பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டுத் திருடி வந்தார். கடந்த 2 ஆண்டுகளில் காரைக்குடி, குன்றக்குடி மட்டுமின்றி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஈரோடு, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடியுள்ளார்” என்று கூறினர்.