

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யவுள்ளதாக, மும்பை போலீஸ் என மிரட்டல் உட்பட பல்வேறு வகையான சைபர் மோசடிகளில் பொதுமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் ரூ.10 கோடி மீட்கப்பட்டுள்ளது.
மும்பையிலிருந்து டிராய் அதிகாரி பேசுவதாகக் கூறி அறிமுகம் செய்துகொள்ளும் மோசடி நபர்கள், ``உங்களது செல்போன் எண் மற்றும் ஆதார் கார்டு பண மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளது.
எனவே, உங்களை கைது செய்ய உள்ளோம். கைது நடவடிக்கை தவிர்க்க உங்களது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நாங்கள் சொல்லும் வங்கிக் எண்ணுக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் அதை ஆய்வு செய்து உங்கள் மேல் தவறு இல்லை என்றால், பணத்தை உங்களுக்கே திருப்பி அனுப்பிவிடுகிறோம்'' என்று மிரட்டுவார்கள்.
சிலர் பயந்து போய் நேர்மையை நிரூபிக்க அவர்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பி வைப்பார்கள். அதன் பிறகு அவர்களை தொடர்புகொள்ள முடியாது. அதன் பிறகே ஏமாற்றப்பட்டதை உணரும் பொதுமக்கள் சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் தெரிவிப்பார்கள். இதேபோல், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டதாகவும், மும்பை போலீஸாராகிய நாங்கள் உங்களை கைது செய்வோம் எனவும் மிரட்டுவார்கள்.
பின்னர் மேற்சொன்ன பாணியிலேயே பணத்தை பறிப்பார்கள். இப்படி பல கோடி ரூபாய்களை மோசடி கும்பல் பறித்துள்ளது. இதில் உஷாரான ஒரு சிலர் உடனடியாக சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் தெரிவிப்பார்கள். போலீஸாரும் விரைந்து செயல்பட்டு வாடிக்கையாளர்கள் அனுப்பிய பணத்தை, வங்கி அதிகாரிகளுடன் இணைந்து இடைமறித்து தடுத்து வைப்பார்கள். அதன் பிறகு அந்த பணம் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட பொதுமக்களிடம் வழங்கப்படும்.
இது மட்டுமல்லாமல் இதேபோல் பல்வேறு வகை சைபர் மோசடிகளால் பறிக்கப்பட்ட பணம், இந்தாண்டு ஜனவரி 1 முதல் கடந்த 29-ம் தேதி வரையிலான 5 மாதத்தில் ரூ.10 கோடியே 25 லட்சத்து 20,600 மீட்கப்பட்டு பாதிக்கப்பட்ட 1,284 பேரிடம் சென்னை சைபர் க்ரைம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.2.31 கோடி மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.