

சென்னை: காவலாளியாக வேலை செய்துகொண்டு, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு போதைப் பொருள் விற்பனை செய்துவந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையைத் தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளனர்.
அதன்படி, பட்டினப்பாக்கம் போலீஸாருடன் இணைந்து, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தனிப்படையினர் நேற்று பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் முகத்துவாரம் அருகே கண்காணித்தனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களின் உடைமைகளைச் சோதித்தபோது அவர்கள் ஹெராயின் மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போதைப் பொருள் வைத்திருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எஜத் அலி (27), அவரது கூட்டாளிகளான அதே மாநிலத்தைச் சேர்ந்த அஜிஸ் (26), இம்ரான் அலி (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கைதான 3 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் தங்கி செக்யூரிட்டி வேலை செய்துவருவதும், அசாம் மாநிலத்திலிருந்து ஹெராயின் போதைப் பொருட்களை வாங்கிவந்து, சென்னைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் மற்றும் சென்னையில் உள்ள செல்வந்தர்கள், மாணவர்களுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்துவந்ததும் தெரியவந்ததாக போலீஸார் கூறினர். இதையடுத்து, 3 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.