

மதுரை: பாலியல் வழக்கில் தண்டனை அனுபவிக்கும் சிறைக் கைதிக்கு பாதுகாவலர் இல்லாமல் பரோல் விடுமுறை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில் பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவாசிங். இவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி பத்மநாபபுரம் உதவி அமர்வு நீதிமன்றம் 2004-ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மாவட்ட மகளிர் நீதிமன்றம் 2016-ம் ஆண்டிலும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு 2023-ம் ஆண்டிலும் உறுதி செய்தது. இதையடுத்து சிவாசிங் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது தாயார் பாலம்மாள் தனது மகனுக்கு சாதாரண பரோல் விடுமுறை கேட்டு பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். அந்த மனுவில், “எனக்கு 80 வயதாகிறது. பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறேன். சிகிச்சை பெற போதுமான பண வசதி இல்லை. இதனால் என் மகனின் உதவி தேவைப்படுகிறது. இதனால் மகனுக்கு சாதாரண பரோல் விடுமுறை வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த மனு ஏற்கப்பட்டு சிவாசிங்குக்கு 21 நாட்கள் சாதாரண பரோல் விடுமுறையும், பாதுகாவலர்கள் உடன் இருக்கவும் 24.3.2025-ல் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவில் மாற்றம் செய்து பாதுகாவலர்கள் இல்லாமல் பரோல் விடுமுறை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பாலம்மாள் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.ஆனந்த்வெங்கடேஷ், எல்.விக்டோரியா கெளரி அமர்வு விசாரித்தது. கூடுதல் அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “மனுதாரரின் மகன் பாலியல் வழக்கில் தண்டனை பெற்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அதே கிராமத்தில் தான் வசிக்கிறார். இதனால் பாதுகாவலர்கள் இல்லாமல் பரோல் விடுமுறை வழங்க முடியாது,” எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “நாகர்கோவில் நன்னடத்தை அலுவலரின் அறிக்கை அடிப்படையில் தான் மனுதாரரின் மகனுக்கு சாதாரண விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையைில் மனுதாரர் மகன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. இதனால் மனுதாரின் மகனுக்கு பாதுகாவலர் இல்லாமல் சாதாரண பரோல் விடுமுறை வழங்க பரிசீலிக்கலாம். மனுதாரரின் மகன் ஏற்கெனவே 2 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். இதனால் சாதாரண விடுப்பு காலத்தில் எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க மனுதாரர் பரோல் விடுமுறை காலத்தில் தினமும் மாலை 5.30 மணியளவில் திருவட்டாறு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என உத்தரவிட்டனர்.