தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர் 3 பேர் விமான நிலையத்தில் கைது

கைது செய்யப்பட்ட முகமது கசிம் பதான், தன்ராஜ் பொக்ரியால், சங்குபிள்ளை சரோஜினி தேவி.
கைது செய்யப்பட்ட முகமது கசிம் பதான், தன்ராஜ் பொக்ரியால், சங்குபிள்ளை சரோஜினி தேவி.
Updated on
1 min read

சென்னை: சட்ட விரோதமாக தமிழகத்தில் தங்கியிருந்த வெளிநாட்டினர் 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று, அதன் மூலம் சிலர் வெளிநாடு தப்பிச் செல்ல உள்ளதாக சென்னை விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, அப்பிரிவினர் விமானத்தில் செல்ல சென்னை விமான நிலையம் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது, வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது கசிம் பதான் (41), இலங்கையைச் சேர்ந்த சங்குபிள்ளை சரோஜினி தேவி (58), நேபாளத்தைச் சேர்ந்த தன்ராஜ் பொக்ரியால் (40) ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று, அதை வைத்து அவர்களின் நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்தது. மேலும் இவர்கள் இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கி இருந்ததும் தெரியவந்தது.

இவர்களை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் இவர்கள் என்ன நோக்கத்துக்காக இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கினார்கள் என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க இவர்கள் 3 பேருக்கும் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற உதவிய முகவர்களான ஒடிசாவைச் சேர்ந்த பினா தாஸ் (54), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (44), ஆந்திராவைச் சேர்ந்த சென்னம்மா (45), சிவகங்கையைச் சேர்ந்த பரகதுல்லா (59) ஆகிய 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in