

கோவை: கோவை - பாலக்காடு சாலை, மதுக்கரை மரப்பாலத்தை அடுத்து க.க.சாவடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக (ஆர்.டி.ஓ) சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இங்கு கூடுதல் எஸ்.பி திவ்யா தலைமையிலான கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று (மே 28) சோதனை நடத்தினர். அதில், அந்த சோதனைச் சாவடி அலுவலகத்தில் உள்ள பதிவறையில் இருந்து ரூ.1 லட்சம், கோப்புகள் வைக்கும் டேபிள் ரேக்கில் இருந்து ரூ.17,060, மேஜை டேபிள் டிராயரில் இருந்து ரூ.30,500 என மொத்தம் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 560 கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சதீஷ் ஜெயச்சந்திரன் (48), உதவியாளர் லோக நாதன் (39) ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். ஆனால், அந்த பணத்துக்கு அவர்களால் கணக்கு காட்ட முடியவில்லை. தொடர்ந்து ரூ.1.47 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர். அதேபோல், பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் உள்ள கோபாலாபுரத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியிலும் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.66,080 பணத்தை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், மேற்கண்ட பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர், உதவியாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக கூடுதல் எஸ்.பி திவ்யா இன்று (மே 29) கூறும்போது, “க.க.சாவடியில் உள்ள ஆர்.டி.ஓ சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ.1.47 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, மோட்டார் வாகன ஆய்வாளர் சதீஷ் ஜெயச்சந்திரன், உதவியாளர் லோகநாதன் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோபாலபுரம் சோதனைச் சாவடியில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக உயரதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.