

சிவகங்கை: இளையான்குடி அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பெத்தனேந்தலைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்திக் (28). இவர் கடந்த 2021-ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அச்சிறுமி கர்ப்பமானார். இது குறித்த புகாரின் பேரில், சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக்குக்கு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், கர்ப்பமாக்கிய குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறை, ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் தனலெட்சுமி ஆஜராகி வாதாடினார்.