கோவை சோதனைச் சாவடிகளில் கணக்கில் வராத ரூ.2.13 லட்சம் பறிமுதல்!

கோவை சோதனைச் சாவடிகளில் கணக்கில் வராத ரூ.2.13 லட்சம் பறிமுதல்!
Updated on
1 min read

கோவை: கோவையில் கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.2.13 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

கோவை - பாலக்காடு சாலை க.க.சாவடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடியில் இருந்து கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஆவணங்களில் ‘சீல்’ வைத்து வழங்கப்படும். இந்த பணிக்காக, வாகன ஓட்டிகளிடம் கையூட்டு பெறுவதாக புகார்கள் எழுந்தன.

இதனடிப்படையில், கூடுதல் எஸ்.பி. திவ்யா தலைமையிலான கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், க.க.சாவடியில் உள்ள சோதனைச் சாவடியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல, இன்ஸ்பெக்டர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் மற்றொரு குழுவினர் பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் எல்லையான கோபாலபுரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் சோதனையை தொடங்கினர்.

க.க.சாவடியில் உள்ள சோதனைச் சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் சதீஷ் ஜெயச்சந்திரன், உதவியாளர் லோகநாதன் ஆகியோரும், கோபாலபுரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.தமிழ்செல்வி, உதவியாளர் எம்.சிவகுரு ஆகியோரும் பணியில் இருந்தனர்.

க.க.சாவடியில் உள்ள சோதனைச் சாவடியில் பிரிண்டர் ஸ்டோர் அறையில் ரூ.1 லட்சம், கோப்புகள் வைக்கும் ரேக் டேபிளில் ரூ.17,060, மேஜை டிராயரில் ரூ.30,500 என கணக்கில் வராத மொத்தம் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 560 பறிமுதல் செய்யப்பட்டது.

கோபாலபுரம் சோதனைச் சாவடியில் பதிவறையில் ரூ.60 ஆயிரம், டேபிளில் ரூ.6,080 என மொத்தம் ரூ.66,080 கைப்பற்றப்பட்டது. இரு இடங்களையும் சேர்த்து மொத்தம் ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்து 640 பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி திவ்யா கூறும்போது, “க.க.சாவடி சோதனைச் சாவடியில் மதியம் 2 மணிக்கும், கோபாலபுரத்தில் மதியம் 12 மணிக்கும் சோதனை நிறைவடைந்தது. கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in