மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை முயற்சி: நாடகமாடிய பக்கத்து வீட்டு பணிப்பெண் சிக்கியது எப்படி?

மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை முயற்சி: நாடகமாடிய பக்கத்து வீட்டு பணிப்பெண் சிக்கியது எப்படி?
Updated on
1 min read

சென்னை: தனியாக வசிக்கும் மூதாட்டியை தாக்கி நகை கொள்ளையில் ஈடுபட்ட பெண் பிடிபட்டது எப்படி என்பது பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மயிலாப்பூர் தெற்கு தெரு, கேசவ பெருமாள் கோயில் தெருவில் ராஜேஸ்வரி (81) என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார்.

இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை பெண் ஒருவர் வந்து குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். இரக்கப்பட்ட மூதாட்டி, சமையல் அறைக்கு சென்று தண்ணீர் எடுக்க முயன்றபோது, தண்ணீர் கேட்ட பெண் பின் தொடர்ந்து சென்று ராஜேஸ்வரியின் கழுத்தை நெரித்து, அவர் அணிந்திருந்த செயின், வளையல் மற்றும் கம்மல் உள்ளிட்ட 10.5 பவுன் தங்க நகைகளை பறித்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத மூதாட்டி உயிர் பயத்தில் `நாராயணா.. நாராயணா..' என்று கூச்சலிட்டுள் ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் வைஷ்ணவி என்ற பெண், சகோதரர் பிரசன்னாவுடன் விரைந்து சென்று மூதாட்டியை காப்பாற்றி உள்ளார். மேலும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளார்.

போலீஸாரின் விசாரணையில் பிடிபட்ட பெண் அரியலூர் மாவட்டம், கோடான்குடி கிராமத்தைச் சேர்ந்த இந்திரா (54) என்பது தெரியவந்தது. இவர், மூதாட்டி ராஜேஸ்வரி வீட்டின் மேல்தளத் தில் உள்ள வீட்டில் வேலை செய்து வந்தவர் என்பதும், மூதாட்டி தனியாக வசிப்பதை அறிந்து அவரை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

‘நாராயணா...’ அபயக்குரல்: மூதாட்டியைக் காப்பாற்றிய வைஷ்ணவி கூறும்போது, ``நாராயணா.. நாராயணா.. காப்பாற்று என்ற அபயக்குரல் கேட்டது. ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை உணர்ந்து சகோதரருடன் ராஜேஸ்வரி வீட்டுக்குள் நுழைந்தேன். அப்போது கைது செய்யப்பட்ட பெண், ராஜேஸ் வரியின் கையை முறுக்கி, கீழே சாய்த்திருந்தார்.

`என்ன நடக்கிறது' எனக்கேட்டபோது, `மூதாட்டி ராஜேஸ்வரி மயங்கிவிட்டார். எனவே அவரை காப்பாற்றுகிறேன்' என்று கூறி நாடகமாடினார். சந்தேகம் அடைந்த நாங்கள் அப்பெண்ணை வெளியே விடாமல் தடுத்து போலீஸிடம் ஒப்படைத்து விட்டோம். சற்று தாமதமாக சென்றிருந்தாலும் மூதாட்டி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்'' என்றார். இதற்கிடையில் மூதாட்டியை காப்பாற்றிய பெண்ணை போலீஸார் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in