கடன் சுமையால் 7 பேர் தற்கொலை: டேராடூனில் இருந்து ஹரியானா வந்து உயிரை மாய்த்த சோகம்

கடன் சுமையால் 7 பேர் தற்கொலை: டேராடூனில் இருந்து ஹரியானா வந்து உயிரை மாய்த்த சோகம்
Updated on
1 min read

சண்டிகர்: ஹரியானாவின் பஞ்ச்குலாவில் டேராடூனைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். செக்டார் 27-ல் உள்ள ஒரு வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் இருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

டேராடூனைச் சேர்ந்த பிரவீன் மிட்டல், பஞ்ச்குலாவில் உள்ள பாகேஷ்வர் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் ஒரு ஆன்மிக நிகழ்வில் கலந்து கொள்ள வந்துள்ளார். நிகழ்வு முடிந்து பிரவீன் குடும்பத்தினர் டேராடூனுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஞாயிற்றுக்கிழமையன்று இந்த சம்பவம் நடந்தது.

செக்டார் 27 இல் உள்ள ஒரு வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சிலர் வாந்தி எடுத்தபடி சிரமப்படுவதை உள்ளூர்வாசிகள் கண்டனர். இதனையடுத்து அவர்களை வெளியே எடுக்க முயன்று காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான புனீத், " இந்த சம்பவம் எங்கள் வீட்டுக்கு அருகில் நடந்தது. ஒரு கார் எங்கள் வீட்டுக்கு வெளியே டவலுடன் நிறுத்தப்பட்டிருந்தது. நாங்கள் காரில் இருந்தவர்களிடம் கேட்டபோது, பாபாவின் நிகழ்ச்சிக்காக வந்ததாகவும், ஹோட்டல் கிடைக்கவில்லை என்றும் சொன்னார்கள். இதனால் அவர்கள் காரில் தூங்குவார்கள் என நினைத்தோம். காரை நகர்த்தி வேறு இடத்தில் நிறுத்தும்படியும் சொன்னோம். அதன் பிறகு, சிறிது நேரம் கழித்து அவர்கள் அனைவரும் வாந்தி எடுத்ததைக் கவனித்தோம்.

அந்த நேரத்தில் ஒருவர் மட்டுமே ஓரளவு நினைவோடு இருந்தார். மற்றவர்கள் மயக்கமடைந்த நிலையில் இருந்தனர். உயிரோடிருந்த அந்த நபரை வெளியே தூக்கியபோது, அவர், “நாங்கள் கடனில் மூழ்கிவிட்டதால், விஷம் குடித்துவிட்டோம். இன்னும் ஐந்து நிமிடங்களில் இறந்துவிடுவேன்” என்று கூறினார். போலீஸார் சரியான நேரத்தில் வந்தாலும், ஆம்புலன்ஸ் 45 நிமிடங்கள் தாமதமாக வந்தது” என்றார்.

இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்த தகவல்களின்படி, மருத்துவமனைக்கு வரும்போதே 7 பேரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இறந்தவர்கள் பிரவீன் மிட்டல்(42), அவரது பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உட்பட மூன்று குழந்தைகள் ஆவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மூத்த காவல்துறை அதிகாரி ஹிமாத்ரி கௌசிக், “ஆரம்பகட்ட விசாரணையில், இது தற்கொலை வழக்கு போல் தோன்றியது. தடயவியல் குழு சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. குற்றம் நடந்த இடத்திலிருந்து அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து அறிவியல் பூர்வமாக பகுப்பாய்வு செய்வோம்" என்று கூறினார். மேலும், சம்பவ இடத்தில் ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனைக்காக பஞ்ச்குலாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in