

சென்னை: ஏ.டி.எம் இயந்திரங்களில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி வங்கி வாடிக்கையாளர் பணத்தை நூதன முறையில் திருடிய உ.பி கொள்ளையர்கள் 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள பல ஏ.டி.எம் இயந்திரங்களில், பணம் எடுக்க முயன்ற வாடிக்கையாளர்களுக்கு பணம் வரவில்லை. ஆனால், பணம் எடுத்தது போன்று வாடிக்கையாளர்களின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதேபோல், நேற்று திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மும்பையிலிருந்து, சென்னை திருவான்மியூரில் புகாருக்குள்ளான ஏடிஎம் இயந்திரத்தை ஆய்வு செய்யுமாறு, சர்வீஸ் பிரிவினருக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து, அங்கு சென்று பார்த்தபோது கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தின் உள்பகுதியில் பணம் வரக்கூடிய இடத்தில் கருப்பு நிற அட்டையை (ஸ்டிக்கர்) ஒட்டி பணம் வெளியே வராமல் தடுத்து, வாடிக்கையாளர்கள் சென்ற பின்னர், அந்தப் பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த வங்கி தரப்பினர் இது தொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
அதன்படி, காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தலிபேரில், அடையாறு துணை ஆணையர் பொன்கார்த்திக் குமார் தலைமையில் திருவான்மியூர் காவல் ஆய்வாளர் முகமது புகாரி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், நூதன முறையில் வாடிக்கையாளர்களின் பணத்தை திருடியதாக உத்திரப் பிரதேசப் மாநிலம், கான்பூரைச் சேர்ந்த குல்தீப் சிங் (26), அவரது கூட்டாளியான அதே மாநிலத்தைச் சேர்ந்த பிரிஜ்பான் (30), சுமித் யாதவ் (33) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.
இவர்கள், ஏ.டி.எம் இயந்திரத்தின் முதல் கதவை கள்ளச்சாவி மூலம் திறந்து, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரக்கூடிய இடத்தில் ஒரு கருப்பு நிற அட்டையை வைத்துவிட்டு கதவை பூட்டிவிட்டு சென்று விடுவார்கள். இதனால், இயந்திரத்திலிருந்து பணம் வெளியே வரும். ஆனால், அடுத்த கட்டமாக வாடிக்கையாளரின் கைக்கு பணம் கிடைக்காது. இடையில் இயந்திரத்துக்குள் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிவிடுவதால் சென்சார் கட்டாகி பணம் பாதியிலேயே இயந்திரத்தில் நின்று விடும்.
வாடிக்கையாளர்கள் பணம் கிடைக்காத விரக்தியில் சென்ற பிறகு கொள்ளையர்கள் ஏடிஎம் மையம் நுழைந்து, மீண்டும் கள்ள சாவி மூலம் திறந்து தடைபட்டு பாதியிலேயே நிற்கும் வாடிக்கையாளர்களின் பணத்தை எடுத்து சென்று விடுவார்கள். இப்படி, கடந்த 4 மாதங்களாக சென்னை மட்டும் அல்லாமல் தாம்பரம், அம்பத்தூர் என சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல லட்சம் ரூபாயை சுருட்டி உள்ளனர்.
பின்னர், செல்போன் செயலி மூலம் கார்களை புக் செய்து, சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து ரயில் மூலம் அவர்களது சொந்த மாநிலம் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். அவர்களிடமிருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை திருட பயன்படுத்திய கள்ளச்சாவி, கருப்பு நிற ஸ்டிக்கர், இருபக்க டேப்ஸ் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
கொள்ளையர்கள் குறித்து போலீஸார் கூறுகையில், கைதான 3 பேருரில் குல்தீப் சிங் காவலாளியாக இருந்துள்ளார். மேலும், அவருக்கு வங்கி ஏடிஎம் இயந்திரம் தொடர்பான தகவல்கள் நன்கு தெரியும். எனவே, அவர் நண்பர்கள் இருவரை சென்னைக்கு அழைத்து வந்து வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தும், அதுவும் ஒதுக்குபுறமான எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரங்களை குறி வைத்து கைவரிசை காட்டி உள்ளனர். அதுவும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலேயே அதிகளவு கைவரிசை காண்பித்துள்ளனர்.
அந்த தினங்களில் வங்கி செயல்படாது என்பதால் வாடிக்கையாளர்கள் உடனடியாக புகார் தெரிவிக்க முடியாது. அதன் பிறகு புகார் அளிக்கும் முன்னர் 3 பேரும் உ.பி சென்று விடுவார்கள். மேலும், இவர்கள் குறுகிய காலத்திற்குள் பணக்காரர்களாக வேண்டும் என்ற ஆசையில், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தால் மாட்டிக் கொள்வோம் என பயந்து, யூ டியூப்பில் வீடியோ பார்த்து நூதன முறையில் வங்கி ஏடிஎம்மிலிருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை திருடியதாக அவர்களே ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.