

சென்னை: மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் ஒருங்கிணைந்து போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸார் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேப்பேரி பேரக்ஸ் சாலையிலுள்ள விடுதி ஒன்றின் அருகே மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை சிலர் ரகசியமாக விற்பனை செய்து வருவதாக கடந்த மாதம் 20-ம் தேதி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த சிறிய அளவிலான கைப்பையை சோதனை செய்தபோது, அதில், மெத்தம்பெட்டமைன் வைத்திருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த பெரம்பூர் பாலாஜி (34), முகமது யூசுப் (35), சேத்துப்பட்டு முகமது சுகைல் உசேன் (23), திரு.வி.க.நகர் முகமது அகமதுல்லா (25) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஷியாம்குமார் (23), அமைந்தகரை இம்மானுவேல் (21) ஆகிய மேலும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் பெங்களூருவில் இருந்து மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.