

புதுச்சேரி: பேஸ்புக்கில் பெண் போல பழகி தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ. 6.5 லட்சம் பறித்தது தொடர்பாக அளித்த புகார் தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
புதுவை லாஸ்பேட்டை சேர்ந்த 46 வயது தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் தன் மனைவியை பிரிந்து வாழ்கிறார். அவருக்கு கடந்த 6 மாதங்களுக்குப் முன்பு பேஸ்புக்கில் கனடா நாட்டை சேர்ந்த இளம் பெண் அறிமுகமாகி பழகி வந்தார். லாஸ்பேட்டை நபரும் அந்த பெண்ணிற்கு தன்னுடைய வீடு, கார் அலுவலகம் போன்றவற்றை படம் எடுத்து அனுப்பி வைத்தார்.
அந்த பெண்ணும் அவருடைய அலுவலகம் வீடு போன்றவற்றை அனுப்பி வைத்தார். இதனால் அவர்களுடைய பழக்கம் நெருக்கமாகவே அந்தப் பெண் மேற்படி நபருக்கு தங்கச்செயின், வாட்ச், வாசனை திரவியங்கள் போன்றவற்றை பரிசாக அனுப்பி வைக்கிறேன் என்று சொல்கிறார். அவர் அனுப்பிய தங்க செயின் கடிகாரம் வாசனை திரவியம் போன்ற அனைத்தையும் வீடியோவாகவும் போட்டோவும் எடுத்து மேற்படி லாஸ்பேட்டை நபருக்கும் அனுப்பி வைக்கிறார். அவர் சொல்லிய 6 நாட்களுக்கு பிறகு இந்தியா கஸ்டம்ஸ் ஆபீசிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
உங்களுக்கு பல லட்சக்கணக்கான மதிப்புடைய வாட்ச், தங்க செயின் மற்றும் வாசனை திரவியங்கள் வந்துள்ளது. அதற்கு இறக்குமதி வரி கஸ்டம்ஸ் டூட்டி கட்டினால்தான் உங்களுக்கு அனுப்பி வைக்க முடியும் என்று கூறினர். அதேபோல் கொரியர் நிறுவனத்தில் இருந்தும் உங்களுடைய பொருள் எங்களுடைய கொரியர் சர்வீஸ் வந்துள்ளது. நீங்கள் கஸ்டமில் பணத்தைக் கட்டி கிளியரிங் செய்தால் மட்டுமே உங்களுக்கு அனுப்பி வைக்க முடியும் என்று பேசினர்.
இதனால் பொருள் வந்தது உண்மைதான் என நம்பி ரூ.6.5லட்சம் பணத்தை அவர்கள் சொன்ன வங்கி கணக்கில் தனியார் நிறுவன அதிகாரி செலுத்தினார். கடந்த 10 நாட்களாகியும் எந்த கொரியரும் வரவில்லை. பெண் தோழியை தொடர்பு கொண்ட போது அவருடைய தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார். சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறுகையில், "இதுபோன்ற மோசடி வேலைகளில் பெரும்பாலும் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களே ஈடுபடுகின்றனர். இதே முறையில் கடந்த சில வருடங்களாக 20க்கும் மேற்பட்ட புகார்கள் புதுவை சைபர் கிரைம் போலீசில் பதிவாகியுள்ளது. நைஜீரிய நாட்டை சேர்ந்த 2 நபர்கள் 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆன்லைனில் வரும் வேலை வாய்ப்பு, பணம் செலுத்தும் நடவடிக்கை, குறைந்த விலையில் பொருட்கள் போன்ற எதையுமே நம்ப வேண்டாம். அரசின் இலவச தொலைபேசி எண்ணான 1930ஐ தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகத்தை பொதுமக்கள் தீர்த்து கொள்ளலாம்" என தெரிவித்தனர்.