

ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியிடம் ரூ.6.58 கோடி மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி ஒருவரின் வாட்ஸ் - அப் எண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறுஞ் செய்தி ஒன்று வந்தது. அதில், குறிப்பிட்ட வர்த்தக செயலியில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈடுபட்டலாம் என கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய அந்த அதிகாரி, அந்த குறுஞ் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்த இரண்டு வாட்ஸ் - அப் குழுக்களில் சேர்ந்தார். பின்னர், அந்த குழுக்களில் அனுப்பப்பட்ட இணைப்பு மூலம் ஆன்லைன் பங்கு வர்த்தக விண்ணப்பத்தை அந்த அதிகாரி பதிவிறக்கம் செய்துள்ளார்.
இதையடுத்து, அந்த அதிகாரியைத் தொடர்பு கொண்ட சிலர், குறிப்பிட்ட பங்கு வர்த்தக செயலியில் முதலீடு செய்யுமாறு கூறியுள்ளனர். அவர்களி ன் பேச்சை நம்பி, ரூ.6 கோடியே 58 லட்சத்தை அந்த செயலியில் டெபாசிட் செய்துள்ளார். அதன்பின், அந்த நபர்களை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சென்னை சைபர் கிரைம் போலீஸில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில், மோசடியில் ஈடுபட்டது, கேரளா மாநிலம் எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஸ்ரீஜித் ஆர் நாயர் (47), அப்துல் சாலு (47), முகமது பர்விஸ் (44) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கேரளா விரைந்த போலீஸார் அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், கேரளாவில் தலைமறைவாக இருந்த 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்து,சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 3 பேரும் மக்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று போலி வங்கி கணக்குகள் வாயிலாக, ஹவாலா மூலம் வெளி நாடுகளுக்கு அந்த பணத்தை அனுப்பி, அங்கிருந்து கிரிப்டோ கரன்சியாக திரும்பப் பெற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.