சென்னை: பிளஸ் 1 மாணவனை கத்தியால் வெட்டிய சிறுவர்கள் - தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை

சென்னை: பிளஸ் 1 மாணவனை கத்தியால் வெட்டிய சிறுவர்கள் - தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை
Updated on
1 min read

சைதாப்பேட்டையில் பிளஸ் 1 மாணவனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய சிறுவர்களை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்த 15 வயது சிறுவன், அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீடு வீடாகத் தண்ணீர் கேன் போடும் வேலையை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் வழக்கம் போல சிறுவன் ஜோதியம்மாள் நகரில் தண்ணீர் கேன் போட்டு கொண்டிருந்த போது, அங்கு வந்த 7 சிறுவர்கள், அவரை கத்தியால் வெட்டினர். தப்பியோட முயன்ற போது, விடாமல் துரத்திச் சென்று வெட்டிவிட்டு ஓடிவிட்டனர்.

இதில், கழுத்து, இடுப்பு, கை, மார்பு என 10 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த சிறுவனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சைதாப்பேட்டை போலீஸார், வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த 14 முதல் 17 வயதுடைய 7 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் கூறும்போது, ”ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்த இந்த சிறுவர்களுக்கிடையே இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவேற்றுவது, அதற்கு கருத்து தெரிவிப்பது தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது.

இதில் 2 கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வந்துள்ளனர். அந்த வகையில், அதில் ஒரு கோஷ்டியைச் சேர்ந்த இந்த சிறுவனை மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்த சிறுவர்கள் வெட்டியுள்ளனர். தலைமறைவாகி உள்ள சிறுவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in