

சென்னையில் 2 இடங்களில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை செனாய் நகர் ஜோதியம்மாள் நகரை சேர்ந்தவர் இளைய சூரியன் (29). இவர் கடந்த 22ம் தேதி இரவு அப்பகுதியில் நின்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், இளைய சூரியனை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1,500 பணத்தை பறித்துச் சென்றனர்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் டிபி சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி, அயனாவரத்தை சேர்ந்த நிவாஸ் (26), சுமன் (19), யஷ்வந்த் (19) ஆகிய மூன்று பேரையும் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல், சென்னை மூவரசம் பேட்டையை சேர்ந்த யுவராஜ் (29) கடந்த ஆண்டு செப்டம்பரில் மடிப்பாக்கம் ராகவா நகர் 12-வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மடிப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து, மடிப்பாக்கத்தை சேர்ந்த லோகேஷை (19) கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பள்ளிக்கரணையை சேர்ந்த சதீஷை (20) நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.