சென்னை விமான நிலையத்தில் 3 மாதங்களில் கேட்பாரற்றுக் கிடந்த உடமைகளில் ரூ.1.3 கோடி மதிப்புள்ள தங்கம், ட்ரோன்கள்!

சென்னை விமான நிலையத்தில் 3 மாதங்களில் கேட்பாரற்றுக் கிடந்த உடமைகளில் ரூ.1.3 கோடி மதிப்புள்ள தங்கம், ட்ரோன்கள்!

Published on

சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்களில் கேட்பாரற்றுக் கிடந்த உடமைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.1.3 கோடி மதிப்புள்ள தங்கம், சக்தி வாய்ந்த ட்ரோன்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரம், நட்சத்திர ஆமைகள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தின் வருகை பகுதியில் கடந்த 3 மாதங்களில் கேட்பாரற்று கிடந்த உடமைகளை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் ஒரு உடமைக்குள் சுமார் ரூ.80 லட்சம் மதிப்புள்ள 1.157 கிலோ தங்கக் கட்டிகள், மற்றொரு உடமைக்குள் ரூ.13 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று, மற்றொரு உடமைக்குள் 427 நட்சத்திர ஆமைகள் இருந்தன. அந்த நட்சத்திர ஆமைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும். அதேபோல், கேட்பாரற்று கிடந்த மற்றொரு உடமைக்குள் ரூ.26 லட்சம் மதிப்புள்ள சக்தி வாய்ந்த 16 ட்ரோன்கள் இருந்தன.

அனைத்தையும் சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றி, கடத்தி வந்த கடத்தல் நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சுங்கத் துறை அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸில், இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் வரும் 30ம் தேதிக்குள் சென்னை மீனம்பாக்கம் சுங்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகாத நபர்களை தேடப்படும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in