

சென்னை: தி.நகர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, நகை திருடுவதை வழக்கமாக வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
கூடுவாஞ்சேரி, வல்லஞ்சேரியைச் சேர்ந்தவர் நந்தினி (41). இவர், கடந்த மார்ச் 30-ம் தேதி தி.நகர் சென்று ஜவுளிக்கடையில் புதிய ஆடைகளை வாங்கிக் கொண்டு ரங்கநாதன் தெரு வழியாக அங்குள்ள பேருந்து நிறுத்தம் சென்றார். முன்னதாக நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை கழற்றி மணிபர்சில் வைத்திருந்தார்.
இந்நிலையில், தி.நகர் பேருந்து நிறுத்தத்தில் வைத்து நகைகளை பார்த்தபோது திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதேபோல் கொட்டிவாக்கம், இளங்கோ நகரைச் சேர்ந்த சசிகலா (50) என்பவர் தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள நகைக்கடையில் தங்க கம்மல் மற்றும் வெள்ளி கொலுசுகளை வாங்கி திரும்பியபோது அதுவும் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து சசிகலா மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த 2 புகார்கள் குறித்தும் அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 2 பேரிடமும் நகை திருட்டில் ஈடுபட்டது ஒரே பெண்ணான திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்த ரேகா (30) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரிடமிருந்து 46.5 கிராம் தங்க நகைகள் மற்றும் 144 கிராம் எடை கொண்ட 2 ஜோடி வெள்ளி கொலுசுகள் மீட்கப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட ரேகா மீது ஏற்கெனவே மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளதும், இவர் தி.நகர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடுவதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.