

கோவை: ரூ.1 கோடி பணம் கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
கோவை குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பி.வேலுமணி. முன்னாள் அமைச்சரான இவர், தற்போது தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாகவும், அதிமுக கொறடாவாகவும் உள்ளார்.
இந்நிலையில், மர்ம நபர்கள் இவருக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக, அதிமுக கோவை புறநநகர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.தாமோதரன் தலைமையிலான நிர்வாகிகள் நேற்று மாநகர காவல் ஆணையர் ஏ.சரவணசுந்தரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எஸ்.பி.வேலுமணியின் பெயரில், அவரது இல்லத்துக்கு கடந்த 16-ம் தேதி ஒரு கடிதம் வந்தது. அதில் அனுப்பியவர் பெயர், முகவரி இல்லை. அக்கடிதத்தில், `வரும் ஜூலை 30-ம் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வெடிக்க உள்ளது. நாங்கள் உங்களை கொல்லத் திட்டமிட்டுள்ளோம். எங்களுடைய நபர்கள் உங்கள் அருகில் உள்ளனர். எங்கள் அமைப்புக்கு பணம் வேண்டும். காவல் துறையிலும் எங்கள் ஆட்கள் உள்ளனர். உங்களிடம் நிறைய கருப்பு பணம் உள்ளது.
ரூ.1 கோடி பணத்தை ஒரு பையில் வைத்து, நான் சொல்லும் இடத்தில் வைத்துவிட வேண்டும். அந்த பணப் பையை வரும் 25-ம் தேதி மதியம் 2 மணி முதல் 2.30 மணிக்குள், காளப்பட்டி - வெள்ளாணைப்பட்டி சாலை, கலியபெருமாள் குட்டை அருகேயுள்ள குப்பைமேட்டில் வைத்துவிட்டு சென்று விடவும். எனது ஆட்கள் பையை எடுத்துக் கொள்வார்கள். 3 நாட்களுக்கு பிறகு, அதே பையில், அதே இடத்தில் உங்கள் இமெயில் ஐடியுடன் ஒரு ரகசிய குறியீட்டை பெறுவீர்கள். கொடுக்கப்பட்ட மின்னஞ்சலுடன் அந்த குறியீட்டை பகிரவும். இப்படி செய்தால் எங்கள் பக்கத்தில் இருந்து எந்தப் பிரச்சினையும் வராது. நீங்கள் போலீஸாரிடம் போனாலோ, எங்களைப் பிடிக்க முயற்சித்தாலோ உங்கள் குடும்பத்தில் 3 பேரை 3 மாதங்களுக்குள் கொல்வோம். இது வெறும் தகவல் அல்ல, எச்சரிக்கை' என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எஸ்.பி.வேலுமணிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். கோவையில் எந்த அசம்பாவிதமும் நடக்காத வகையில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கொலை மிரட்டல் விடுத்தவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.