

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மூவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான குவாரி உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் தனியார் கல் குவாரி உள்ளது. இங்கு மே 20-ம் தேதி 400 அடி பள்ளத்தில் பாறை சரிந்து விழுந்ததில் பொக்லைன் ஓட்டுநர் உட்பட 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து குவாரி உரிமத்தை தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் ரத்து செய்தார்.
இச்சம்பவம் குறித்து குவாரி உரிமையாளர் மல்லாக்கோட்டையைச் சேர்ந்த மேகவர்மன் (48) மீது டிஎஸ்பி செல்வகுமார் தலைமையிலான எஸ்.எஸ்.கோட்டை போலீஸார் வழக்கு பதிந்தனர். மேகவர்மன் தலைமறைவான நிலையில், அவரின் தம்பி கமலதாசன் (45), மதுரை மாவட்டம் இ.மலம்பட்டியைச் சேர்ந்த குவாரி பொறுப்பாளர் கலையரசன் (32), மேற்பார்வையாளர் ராஜ்குமார் (30) ஆகிய மூவரை போலீஸார் கைது செய்தனர். மேகவர்மனை தேடி வருகின்றனர்.