

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் அடகு வைத்திருந்த 498 பவுன் நகைகள் கையாடல் செய்யப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, சங்கத்தின் செயலாளர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேப்பஞ்சேரியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், வேப்பஞ்சேரி மற்றும் ஓவரூர் பகுதி விவசாயிகள் கூட்டுறவு கடன், பயிர்க் கடன், நகைக் கடன் பெற்றுள்ளனர்.
வேப்பஞ்சேரியைச் சேர்ந்த தீபா என்பவர் 15.4.2024-ல் அடகு வைத்த தனது 6 பவுன் நகையை மீட்பதற்காக நேற்று சென்றார். ஆனால், அவரின் நகை இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தீபா, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, சங்கத்துக்கு வந்திருந்த மற்ற விவசாயிகளும், தாங்கள் அடகுவைத்த நகைகளைக் கேட்டு, ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த கூட்டுறவுத் துறை அதிகாரிகள் அங்கு வந்து, விவசாயிகளை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் பிரபா உடனடியாக அங்கு சென்று, சங்கத்தில் ஆய்வு செய்தார். அதில், சங்கத்தில் விவசாயிகளால் ரூ.1.31 கோடிக்கு அடகுவைக்கப்பட்ட 498 பவுன் நகைகள் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, கூட்டுறவு சங்கச் செயலாளர் முருகானந்தத்தை பணியிடை நீக்கம் செய்து துணைப் பதிவாளர் பிரபா உத்தரவிட்டார். மேலும், அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் விவசாயிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.