

திருப்பூர்: 18 ஆண்டுகளாக திருப்பூரில் போலி மருத்துவர் ஒருவர் பலருக்கும் சிகிச்சை அளித்து வந்த நிலையில், 3-வது முறையாக மீண்டும் இன்று கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் முருகம்பாளையத்தில் சூர்யாகிருஷ்ணா நகர் 1-வது வீதியில் செயல்பட்டு வந்த ஹிமாலயா பார்மசி என்ற மருந்து கடையில் ஜோலி அகஸ்டின் என்ற நபர், அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு, ஊசி செலுத்தியும் குளுக்கோஸ் பாட்டில்கள் செலுத்தியும் சிகிச்சை செய்வதாக திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்திலிருந்து புகார் பெறப்பட்டது.
இதையடுத்து இன்று (மே 23) மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் மீரா தலைமையில், அலுவலக கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஜோலி அகஸ்டின் மருந்தகத்தின் பின்புறப் பகுதியில் இரண்டு கட்டில் வசதிகளுடன் நோயாளிகளுக்கு ஊசி மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் செலுத்தியதும் தெரிய வந்தது. அவரிடம் விசாரித்தபோது, நோயாளிகளுக்கு வைத்தியம் அளிப்பதற்கான எந்தவித கல்வித் தகுதியும் இல்லாததும் தெரியவந்தது.
கேரளாவில் பிளஸ் 2 வரை படித்துவிட்டு, கடந்த 18 ஆண்டுகளாக திருப்பூரில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை ஒப்புக்கொண்டார். இதற்கு முன்பும் அவர் ஏற்கெனவே கடந்த 2017-ம் ஆண்டும், 2024-ம் ஆண்டும் இதே காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அங்கு சிகிச்சை அளிக்க வைத்திருந்த மருந்து பொருட்கள் மற்றும் ஊசி மருந்துகள் சர்க்கரை அளவு பார்க்கும் கருவி, ரத்த அழுத்தம் பார்க்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டு ஹிமாலயா மருந்தகம் கிளினிக்குக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டது. போலி மருத்துவர் ஜோலி அகஸ்டினை வீரபாண்டி காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து சென்றனர்.