

சென்னை: வாடிக்கையாளர்போல் நகைக்கடைக்குள் நுழைந்து நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் அரிஹந்த்(34). இவர், கடந்த 7 ஆண்டுகளாக பழைய வண்ணாரப்பேட்டை, டி.எச் சாலையில் தங்க நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 19-ம் தேதி காலை, நகை வாங்குவதற்காக பெண் வாடிக்கையாளர் ஒருவர் வந்தார்.
வந்தவர் கம்மல் மற்றும் மோதிரம் உள்ளிட்ட சில நகைகளை பார்த்துவிட்டு, எதுவும் பிடிக்கவில்லை என்று கடையிலிருந்து வெளியேறினார். பின்னர் கடையிலிருந்த ஊழியர்கள் நகைகளை சரிபார்த்தபோது, 4 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் காணாமல்போனது தெரியவந்தது. இதையடுத்து, கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, 19-ம் தேதி காலை நகைக்கடைக்கு வந்த பெண் வாடிக்கையாளர் நகை வாங்குவதுபோல் நடித்து, மோதிரத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து நகை திருட்டில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டை சின்னதம்பி தெருவைச் சேர்ந்த ராணி(47) என்பவரை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். ராணி மீது ஏற்கெனவே இதேபோல் பூக்கடை காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.