

தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லிங்கம் நகர் குருகிருபா குடியிருப்பில் வசிப்பவர் பாலாஜி (42). காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று காலை 7:30 மணிக்கு பணிக்கு சென்றார்.
இவரது மனைவி மகேஸ்வரி காலை, 9:45 மணிக்கு, தனது குழந்தைக்கு எழுத்து பயிற்சி கொடுப்பதற்காக பெருங்களத்துாரில் உள்ள டியூசனுக்கு அழைத்து சென்றார். பயிற்சி முடிந்து மதியம் 12:30 மணிக்கு வீ்ட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி வீட்டிற்குள் சென்று பார்த்தார்.
அப்போது, பீரோ அருகில் டப்பாவில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதிலிருந்த 40 சவரன் நகை மற்றும் ரூ. 1.50 லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பீர்க்கன்காரணை போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர் உதவி ஆய்வாளர் முரளி வரவைக்கப்பட்டு, கைரேகை பதிவு செய்யப்பட்டது. அதில் ஒரு கைரேகை கூட பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது.
அதில் பீரோவை உடைக்காமல் அருகில் டப்பாவில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து திறந்து நகையை திருடி சென்றுள்ளனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது தெரிந்தவர்களோ அல்லது பல நாட்கள் நோட்டமிட்டோ இதில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை போலீஸார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் சமீபத்தில் தான் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகையை வீட்டு விசேஷத்திற்காக கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.