

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று கோயில்களில் உண்டியல் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் செல்வ விநாயகர் கோயில், கற்பக விநாயகர் கோயில், முத்துமாரி அம்மன் கோயில் என, 3 கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் நேற்று இரவு மர்ம நபர்கள் 4 பேர், அடுத்தடுத்து உண்டியல்களை உடைத்து, பணத்தை திருடியதாக கூறப்படுகிறது.
இது குறித்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், செம்பரம்பாக்கம் பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் இருந்த நசரத்பேட்டை சப் - இன்ஸ் பெக்டர் குமரேசன், திருட்டில் ஈடுபட்ட 4 இளைஞர்களை அப்பகுதி மக்களின் உதவியுடன் மடக்கி பிடித்தார். தொடர்ந்து, 4 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், அவர்கள் சென்னை, கோயம்பேடு பகுதியை சேர்ந்த சஞ்சய் (19), அர்ஜூன் (21), சூர்யா (20), பிரகாஷ் (20) ஆகியோர் என்பதும், இவர்கள் மீது கோயம்பேடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, உண்டியல் கொள்ளை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், 4 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து இரு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.