

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதாக கூறி ஆயிரம் ரூபாய் பெற்ற போலி வருவாய்த் துறை ஊழியரை போலீஸார் கைது செய்தனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் கடந்த 20-ம் தேதி முதல் வருவாய்த் தீர்வாயம் ( ஜமாபந்தி) நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வருவாய்த் தீர்வாயத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க கடந்த 20-ம் தேதி ஊத்துக்கோட்டை சிற்றம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் வந்துள்ளார். அப்போது, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வெளியே நின்றிருந்த, வடமதுரை, தந்தை பெரியார் நகரை சேர்ந்த செல்வின் (40) என்பவர், தன்னை வருவாய்த் துறை ஊழியர் எனக் கூறி ராஜேந்திரனிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
மேலும், அவரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதாகவும், அதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என தெரிவித்து, அதற்கு முன் பணமாக ஆயிரம் ரூபாயையும் ராஜேந்திரனிடம் பெற்றுள்ளார். மேலும், மே.21ம் தேதி பட்டா பெயர் மாற்றம் செய்துவிட்டு, மீத தொகையை பெற்று கொள்வதாக ராஜேந்திரனிடம் செல்வின் கூறியுள்ளார். இதனிடையே, செல்வினின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ராஜேந்திரன், வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர் குறித்து விசாரித்த போது, செல்வின் வருவாய்த் துறையில் பணிபுரிய வில்லை என்பது தெரிய வந்தது.
இது குறித்து, ஊத்துக்கோட்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஊத்துக்கோட்டை போலீஸார், வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு சுற்றி திரிந்த போலி வருவாய்த் துறை ஊழியர் செல்வினை கைது செய்தனர்.