

சென்னை: கொட்டிவாக்கத்தில் வேலை செய்த வீட்டிலேயே நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பிய நேபாள தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கொட்டிவாக்கம், லட்சுமண பெருமாள் 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (60). ஐ.டி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள். இருவருக்கும் திருமணமாகி கணவர் வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில், மகேஷ் குமார் வீட்டு பாதுகாப்பு மற்றும் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ள நேபாள நாட்டைச் சேர்ந்த ரமேஷ் மானசாகி (22) மற்றும் அவரது மனைவி பினிதா சாகி (21) ஆகிய இருவரை ஒரு வருடத்துக்கு முன்னர் பணிக்கு அமர்த்தி இருந்தார்.
இந்நிலையில், கடந்த 14-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மகேஷ் குமார் குடும்பத்துடன் சென்றார். அன்று இரவு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 60 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. வீட்டில் பணி செய்த நேபாள தம்பதி மாயமாகி இருந்தனர்.
அதிர்ச்சி அடைந்த மகேஷ் குமார் இதுதொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், வீட்டில் பணி செய்த நேபாள தம்பதி கூட்டாளிகள் இருவருடன் வந்து மகேஷ் குமார் வீட்டில் கைவரிசை காட்டிவிட்டு தப்பியது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த அவர்களை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட ரமேஷ் மானசாகி மற்றும் அவரது மனைவி பினிதா சாகி ஆகியோர் நேபாளத்தைச் சேர்ந்த அவர்களது நண்பர்களுடன் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தங்கி பெரிய பங்களாக்கள் மற்றும் வீடுகளில் வேலைக்குச் சேர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் பெங்களூருவில் ஆதார் அட்டைகளை போலி ஆவணங்கள் மூலம் பெற்று அங்கே வசித்து வந்துள்ளனர்.
திருடிய பணம், நகைகளுடன் அவர்களது நாட்டுக்கு சென்று செலவு செய்து விட்டு பின்னர் இந்தியா வந்து எங்கேயாவது தங்கி வேலையை பார்ப்பதுபோல் நடித்து அந்த வீடுகளில் திருடி உள்ளனர். அப்படிதான் தற்போது கொட்டிவாக்கத்திலும் கைவரிசை காட்டப்பட்டது. அங்கு கொள்ளையடித்த பணம், நகைகளுடன் உடனே நேபாளம் சென்றால் போலீஸார் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் உடனடியாக செல்லாமல் அண்ணாநகரில் வசிக்கும் அவர்களது கூட்டாளிகளுடன் தங்கி உள்ளனர்.
பின்னர், நேபாளம் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 65 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள நோபாள தம்பதியின் கூட்டாளிகள் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.