

தேனி: தேனி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உறவினர் ஒருவர் உயிரிழந்தார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் 4 வாகனங்களில், சிவகாசியில் இருந்து கடந்த சனிக்கிழமை கொச்சினுக்கு சுற்றுலா சென்றனர். கொச்சின், மூணாறு உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு இன்று மாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த வாகனங்கள் போடிமெட்டு மலைச்சாலையைக் கடந்து அடிவாரப் பகுதியான முந்தல் பகுதிக்கு வந்தது. இதில் ஒரு காரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அக்கா மருமகன் அருண் (49), அவரது மனைவி சத்தியபாமா மற்றும் குழந்தைகள் இருவர் இருந்தனர். காரை ஓட்டுநர் காளிதாஸ் ஓட்டி வந்தார்.
முந்தல் சோதனைச் சாவடியைக் கடந்தபோது இந்த கார் எதிர்பாராத விதமாக எதிரே வந்த கேரளத்தைச் சேர்ந்த கார் மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அருண், போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
மனைவி சத்தியபாமா, ஓட்டுநர் காளிதாஸ் மற்றும் எதிர் வாகனத்தில் வந்த ஜோதி மற்றும் முனியாண்டி ஆகியோரும் காயங்களுடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து குரங்கணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.