

சென்னை: சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு விரைவு ரயிலில் 65 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை கடத்த முயன்ற ராஜஸ்தான் இளைஞரை ஆர்பிஎஃப் போலீஸார் மடக்கி பிடித்தனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எஃப் காவல் ஆய்வாளர் கே.பி.ஜெபஸ்டியன் தலைமையில் ஆர்.பி.எஃப் உதவி துணை ஆய்வாளர்கள் முகமது அஸ்லாம், அன்புசெழியன், தலைமை காவலர்கள் ராஜேஷ், ஜி. கண்ணன், வி.குமரவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட தயாராக இருந்த விரைவு ரயிலில் பெரிய பார்சல்களுடன் ஒருநபர் ஏறினார். அவர் மீது ஆர்.பி.எஃப் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து, அவரது பைகளை சோதித்தபோது, அதில் தடைசெய்யப்பட்ட 65 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் இருந்தன.
அதாவது, அந்த பைகளில் ஹான்ஸ் பாக்கெட்கள், பூலிப் பாக்கெட்கள், விமல், ஆர்எம்டி பான் மசாலா பாக்கெட்டுகள் இருந்தன. இதன்மதிப்பு சுமார் ரூ. 80 ஆயிரம். இதையடுத்து, அவரை பிடித்து ஆர்.பி.எஃப் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மேசா ராம் (20) என்பதும், பெங்களூரில் இருந்து சென்னைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்து வந்ததும், இங்கிருந்து விரைவு ரயிலில் புதுச்சேரிக்கு கொண்டு சென்று, அங்கு அதிக விலைக்கு விற்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிந்து அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.