

சென்னை: திருவல்லிக்கேணியில் போதை ஊசி செலுத்திய இளைஞர் உயிரிழந்த வழக்கில், போதை ஊசி வாங்கிக் கொடுத்த 3 நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை திருவல்லிக்கேணி தாயார் சாகிப் தெருவை சேர்ந்தவர் மொய்தீன் என்ற மத்தின் (21). இவர் மண்ணடியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தார். திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் கடந்த 14-ம் தேதி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த மொய்தீன், திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மொய்தீன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இதில், மொய்தீனுக்கு போதை பழக்கம் இருந்ததும், சம்பவத்தன்று ஊசி மூலம் போதை செலுத்திக் கொண்டதால் வலிப்பு ஏற்பட்டு இறந்திருப்பதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
அவருக்கு போதை ஊசி வாங்கிக் கொடுத்ததாக திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (23), எல்லீஸ் சாலை பகுதியைச் சேர்ந்த அமித் ஷெரீப் (24), திருவொற்றியூர் விம்கோ நகரை சேர்ந்த இனாயதுல்லா (22) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.