

சென்னை: வெளிநாட்டில் வசிக்கும் தனது உறவினரின் வீடுகளை போலி பத்திரங்கள் மூலம் லீஸுக்கு (குத்தகைக்கு) விட்டு, ரூ.32 லட்சம் பணத்தை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை பெரம்பூர், கோபால் காலனி, மேற்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட் வில்லியம் (62). வெளிநாட்டு இந்தியரான இவருக்குச் சொந்தமான இடம் மடிப்பாக்கத்தில் உள்ளது. இந்த இடத்தில் குடியிருப்பு கட்டுவதற்கான பொறுப்பை சகோதரி மகனான வியாசர்பாடி, பெரியார் நகரைச் சேர்ந்த ஜேசு ஆனந்த் (38) என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். கட்டுமானத்துக்கு தேவைப்படும் பணம் அனைத்தையும் கொடுத்துள்ளார்.
அதில், 4 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அந்த வீட்டுக்கு, தான் உரிமையாளர் எனக் கூறி, ஜேசு ஆனந்த், 4 வீடுகளையும் ரூ.32 லட்சத்துக்கு லீஸுக்கு விட்டுள்ளார். கடந்த ஒரு வருடமாக இந்த விவகாரம் வெளிநாட்டில் வசித்த ராபர்ட் வில்லியம்ஸ்க்கு தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில், அண்மையில் சென்னை வந்த அவர், மடிப்பாக்கம் சென்று புதிய வீட்டை பார்வையிட்டார்.
அதன் பிறகே, வீடுகள் அனைத்தும் தனக்குத் தெரியாமல் தனது கையெழுத்தை போலியாக போட்டு, ஜேசு ஆனந்த், குத்தகைக்கு விட்டுள்ளது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராபர்ட் வில்லியம் இது தொடர்பாக கேட்டதையடுத்து ஜேசு ஆனந்த் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து, ராபர்ட் வில்லியம் இது தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவான நபரை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், வேலூரில் பதுங்கி இருந்த ஜேசு ஆனந்த் இன்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவரிடமிருந்து 2 செல்போன்கள், 1 லேப் டாப், போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே, கைது செய்யப்பட்ட ஜேசு ஆனந்த், இதேபோல் பலரிடம் கைவரிசை காட்டியதும், பல கார்களை வாடகைக்கு பெற்று அந்த கார்களின் ஆவணங்களை மாற்றி மோசடி செய்துள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.