

சென்னை: மனைவியை அவதூறாக பேசியதால் ஆத்திரத்தில் நண்பனை கத்தியால் குத்திக் கொலை செய்த டீ கடைக்காரரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கே.கே.நகர் ராணி அண்ணாநகரை சேர்ந்தவர் அமித் பாஷா (31). கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவர் கொளத்தூர் 200 அடி சாலையில் உள்ள அவரது நண்பர் ஷேக் அப்துல்லாவின் டீக்கடைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஷேக் அப்துல்லாவின் மனைவியை பற்றி அமித்பாஷா தவறாக பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஷேக் அப்துல்லாவின் கடைக்கு அமித்பாஷா வந்தார். அப்போது, தனது மனைவியை அவதூறாக பேசியது குறித்து அமித்பாஷாவிடம் கேட்ட ஷேக் அப்துல்லா மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கடையில் இருந்த கத்தியை எடுத்து அமித்பாஷாவை குத்திவிட்டு அங்கிருந்து ஷேக் அப்துல்லா தப்பி ஓடிவிட்டார். அங்கிருந்தவர்கள் அமித்பாஷாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அமித்பாஷாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் ராஜமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஷேக் அப்துல்லாவை (31) கைது செய்து சிறையில் அடைத்தனர்.