

ஜவுளிக்கடை உரிமையாளரைக் கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், 3-வது லிங்க் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசிப்பவர் ஹித்தேஷ்(26). இவர், எம்.கே.பி நகரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது பெற்றோர் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெங்களூரு சென்று விட்டனர். இதனால், ஹித்தேஷ் வீட்டில் தனியாக இருந்தார்.
ஆபாச செயலி: அப்போது, அவர் இயற்கைக்கு மாறான உறவு கொள்ளும் (தன்பாலின உறவு) நபர்கள் அதிகளவில் பயன்படுத்தும் ஆபாச செயலி மூலம், செல்போன் எண்களை பெற்று சிலரைத் தொடர்பு கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி நள்ளிரவு 11.30 மணியளவில் ஹித்தேஷ் வீட்டுக்கு 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் ஆட்டோவில் வந்தனர்.
சிறிது நேரம் ஹித்தேஷ் உடன் நெருக்கமாக இருந்துவிட்டு, அவரை தாக்கி குளியல் அறையில் கட்டிப்போட்டு 30 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்களை அந்தக் கும்பல் திருடிச் சென்றது. பின்னர் இதுதொடர்பாக, எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் ஹித்தேஷ் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், கொள்ளையில் ஈடுபட்டது வியாசர்பாடி எம்.கே.பி நகரைச் சேர்ந்த ‘பி’ பிரிவு ரவுடி ஜெயந்தி நாதன் (34), அம்பத்தூர் வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்த ‘ஏ’ பிரிவு ரவுடி ஐயப்பன்(34) மற்றும் 17 வயது சிறுமி என்பது தெரியவந்தது. தலைமறைவான மூன்று பேரும் விழுப்புரத்தில் பதுங்கி இருந்தபோது போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில், உடந்தையாக இருந்த ஜெயந்திநாதனின் மனைவி எஸ்தர் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஹித்தேஷ், ஆபாச செயலி மூலம் முறையற்ற உறவுக்காக ஜெயந்திநாதனை தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அப்போது ஜெயந்திநாதன், ஹித்தேஷ் வீட்டில் உள்ள விவரங்களை தெரிந்து கொண்டுள்ளார். ஒரு வாரம் கழித்து ஹித்தேஷ் மீண்டும் அழைத்த போது, ஜெயந்தி நாதன் கூட்டாளிகளுடன் சென்றுள்ளார். பின்னர் கத்தி முனையில் ஹித்தேஷை மிரட்டி கொள்ளையடித்து தப்பி உள்ளனர்.
ஜெயந்திநாதன், இதுபோன்ற ஆபாச செயலிகளில் பெண்கள் மற்றும் ஆண்களைத் தேடுபவர்களை குறி வைத்து அவர்கள் வீட்டுக்குச் சென்று அவர்களுடன் வீடியோ எடுத்து, மிரட்டி பணம் பறித்து வந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.